இஸ்ரோ விண்வெளி வீரரும், இந்திய விமானப்படை அதிகாரியுமான சுபான்ஷு சுக்லா, நாசாவின் ஆக்சியம் மிஷன் 4-க்கான (Axiom Mission 4) விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார். யார் இந்த சுபான்ஷு சுக்லா ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் 1985ம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி சுபான்ஷு சுக்லா பிறந்தார். 38 வயதான சுக்லா, 2006ம் ஆண்டு ஜூனில், இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் நியமிக்கப்பட்டார்.
சுக்லா விமானக் கேப்டனாகவும், அனுபவம் வாய்ந்த விமானியாகவும், சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார். பிரிவு-1 விமானம் இயக்கும் பயிற்சியாளராகவும், சோதனை விமானியாகவும் இருந்துள்ளார்.
சுக்லா, SUKAI-30 MKI , MIG -21, MIG -29, Jaguar, Hawk, Dornier, AN -32 உட்பட பல்வேறு விமானங்களில் 2,000 மணிநேரத்துக்கும் மேலாக வானில் பறந்த அனுபவம் கொண்டவர்.
இந்திய விமானப்படை அகாடமியில் உயரிய விருதான ‘Sword of Honour’ விருதைப் பெற்றுள்ளார்.
2019 ஆம் ஆண்டு, இஸ்ரோவால் ,தேர்ந்தெடுக்கப்பட்டு, மாஸ்கோவில் உள்ள ஸ்டார் சிட்டியில் உள்ள Yuri Gagarin விண்வெளிப் பயிற்சி மையத்தில் சுக்லா கடுமையான பயிற்சி பெற்றார்.
ககன்யான் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
அந்த திட்டத்துக்காக, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்ஷு சுக்லா ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கு முன்னோட்டமாக, ககன்யான் திட்டத்தில் உள்ள ஒரு விண்வெளி வீரரரை Axiom Mission 4 பயணத் திட்டத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப நாசாவுடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்திருந்தது.
Axiom Space என்பது அமெரிக்காவை தளமாகக் கொண்ட விண்வெளி உள்கட்டமைப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு தனியார் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்கிறது. Axiom Mission 4 என்பது நான்காவது விண்வெளி பயணமாகும்
Axiom 4-ல் கேப்டன் சுக்லா உடன், போலந்து, ஹங்கேரி, மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்களும் விண்வெளிக்குச் செல்கின்றனர். விண்வெளி ஆய்வகத்தில் 14 நாட்கள் வரை தங்கி ஆய்வு செய்ய உள்ளனர்.
நாசாவின் Axiom Mission திட்டத்தில், விண்வெளிக்குச் செல்வதற்காக, இந்திய விமானப் படையின் கேப்டன் சுபான்ஷு சுக்லா, கடந்த ஆண்டு, பயிற்சிக்காக, நாசாவுக்கு அனுப்பப்பட்டார்.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஜப்பானின் AERO SPACE EXPLORATION மற்றும் Japan Manned Space Systems Corporation ஆகியவற்றில் கேப்டன் சுபான்ஷு சுக்லா பயிற்சி பெற்றார்.
இந்நிலையில், முன்னாள் நாசா விண்வெளி வீரர் பெக்கி தலைமையில், நான்கு வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்ல நாசா ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்த பயணத்தின் விமானியாக சுக்லாவை நியமிப்பதாக நாசா அறிவித்துள்ளது. இதன் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை சுக்லா உருவாக்க இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய சுக்லா, விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள எதிர்கால இந்திய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் என்று தெரிவித்தார். மேலும், தனி மனிதனாக விண்வெளிக்குச் சென்றாலும், இது 140 கோடி இந்தியர்களின் விண்வெளிப் பயணம் என்றும் கூறியிருக்கிறார்.
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சர்மாவுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், அவரது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைகளை பெற்று வருவதாகவும் சுக்லா தெரிவித்துள்ளார்.
1984-ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் ராகேஷ் சர்மா விண்வெளி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.