போலீஸ் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் தம்மை கொலை செய்ய சதி நடந்ததாக கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புகார் கடிதம் எழுதியுள்ள அவர், காவல்துறையில் நடைபெற்ற ஆட்சேர்ப்பு முறைகேடுகளை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாம் வெளிக்கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த சில நாட்களில் தனது அலுவலகம் தீக்கிரையானது என புகார் தெரிவித்துள்ள கல்பனா நாயக், அப்போது நான் அலுவலகத்தில் இருந்திருந்தால் எனது உயிரும் பறிபோயிருக்கும் என தெரிவித்துள்ளார்.
போலீஸ் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் தன்னை கொல்ல சதி நடந்ததாக குற்றம் சாட்டியுள்ள அவர், விபத்து நடந்த ஒரு நாளிலேயே போலீஸ் ஆட்சேர்ப்பு பட்டியல் தனது ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மூத்த அதிகாரியின் உயிருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவினால், மற்ற போலீசாரின் நிலைமையை சிந்திக்க வேண்டும் என்றும் கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.