ஒவ்வொரு தேர்தலின்போதும் அலங்கார வாக்குறுதியாக கல்விக் கடன் ரத்து என்று நாடகமாடி ஏமாற்றுவது திமுகவின் வழக்கம் என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை தமிழகத்தின் கல்விக் கடன் நிலுவைத் தொகை 16 ஆயிரத்து 302 கோடி ரூபாய் என்றும், இந்த நிலையில் வெறும் 48 கோடியே 95 லட்சம் ரூபாயை மட்டும் ரத்து செய்வதால் யாருக்கு என்ன பயன்? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதி எண் 159இல் மாணவர்களின் கல்விக் கடனை தமிழக அரசே திருப்பிச் செலுத்தும் என்றுகூறி 4 ஆண்டுகள் ஆவதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். திமுகவின் பொய்களுக்கு இளைஞர்கள் எதிர்காலம் பாழாக வேண்டுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
எனவே உடனடியாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி தமிழக மாணவர்கள் அனைவரின் ஒட்டுமொத்தக் கல்விக்கடனையும் ரத்து செய்து தமிழக அரசே திருப்பிச் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மேலும், குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே கல்விக் கடன் ரத்து என்று மாணவ சமுதாயத்திடம் ஜாதிப் பாகுபாட்டைத் தூண்டும் விதமாகச் செயல்பட வேண்டாம் எனவும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.