சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கணவன் உயிருடன் இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தாவாந்தெருவில் வசித்து வரும் விஜயகுமாருக்கு, ரேவதி என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதையடுத்து கணவரின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்துடன் விஜயகுமார் இறந்துவிட்டதாக கூறி ரேவதி இறப்பு சான்றிதழ் பெற்றுள்ளார். அதனைத்தொடர்ந்து வாரிசு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த நிலையில், விஜயகுமார் உயிருடன் இருப்பதை அறிந்து வருவாய்த்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ரேவதியை போலீசார் கைது செய்தனர்.