மதுரை ரயில் நிலையம் மற்றும் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் 100-க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் வந்தடைந்தது. ரயிலில் இருந்து இறங்கிய 20க்கு மேற்பட்ட இந்து அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்ய முற்பட்ட போது வாகனத்தில் ஏற மறுத்து இந்து முன்னணியினர் காவல்துறையுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் நிலவியது.
பழனியில் இருந்து பாஜக ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் சூரியமூர்த்தி தலைமையில், பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ், நகர தலைவர் ஆனந்தகுமார் முன்னிலையில், பழனியில் உள்ள திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் காவடிகளை எடுத்தபடி திருப்பரங்குன்றம் நோக்கி பாதயாத்திரையை துவங்கினர். அப்போது பாதயாத்திரையை தடுத்து நிறுத்திய போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
திருப்பரங்குன்றம் செல்வதை தடுக்கும் வகையில் சேலம் மாவட்ட பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளை, இரண்டாவது நாளாக போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். சேலம் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார், முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 16 நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், சேலம் மாநகர மாவட்ட பாஜக துணைத் தலைவி சுமதி இரண்டாவது நாளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர் மாவட்டத்தில் மட்டும் 102 பேரை வீட்டுக்காவல் மற்றும் பணியாற்றிய இடங்களில் போலீசார் காவலில் வைத்துள்ளனர். மேலும், திருப்பரங்குன்றம் செல்ல வாகனங்களில் புறப்பட்ட பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திருப்பரங்குன்றத்தில் சுவாமி சன்னதிக்கு செல்லும் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் இருந்த இந்து முன்னணியை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.