ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அந்த தொகுதிக்கு அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாவட்டத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் பணியாற்றும் அந்த தொகுதி வாக்காளர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இறுதிகட்ட பயிற்சி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா, அலுவலர்களுக்கு பணியாணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், அரசின் உத்தரவை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.