தமிழகத்தில் 2026-இல் முருகனின் ஆட்சி அமையும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீது இறைச்சி எடுத்துச்செல்லப்பட்ட விவகாரத்தை கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலையில் சிலர் அசைவ உணவுகளை எடுத்துச்சென்ற விவகாரம் மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் நடத்த பாஜக மற்றும் இந்து அமைப்புகள் முடிவு செய்தன.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். இதனிடையே போராட்டத்திற்கு அனுமதி பெறுவது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை பழங்காநத்தம் பகுதியில் அறப்போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியதை தொடர்ந்து மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சார்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட நிலையில், தமிழக அரசு திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர். மேலும், வெற்றிவேல், வீரவேல் என்றும் அங்கு கூடியிருந்த மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதில் பேசிய பாஜக மாநில செயலாளர் ராம ஸ்ரீனிவாசன், ஸ்டாலின் அரசாங்கம் ஒரு பயந்தாங்கொள்ளி என்பது இன்று தான் தெரிந்தது என விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிற மதம் சார்ந்த அமைப்புகளை கேள்வி கேட்காத காவல்துறை, இந்துக்களுக்கு மட்டும் பல்வேறு கெடுபிடிகளை விதிப்பதாக குற்றம் சாட்டினார்.
திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி சாப்பிட்ட நவாஸ்கனியை தடுக்காத காவல்துறை, அதை தடுக்க முயன்ற இந்துக்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக விமர்சித்தார்.
அறப்போராட்டத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழகத்தில் 2026ம் ஆண்டு முருகனின் ஆட்சிதான் அமையும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடப்பது இந்து விரோத தாலிபான் அரசாங்கம் என கடுமையாக விமர்சித்த ஹெச்.ராஜா, திமுக இனி ஆட்சிக்கே வரமுடியாத நிலை ஏற்படும் என சூளுரைத்தார்.
இந்துக்களுக்கு எதிரான ஆட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருவதாக விமர்சித்த ஹெச்.ராஜா, அநீதி இழைத்த அனைத்து காவல்துறை அதிகாரிகளும் நீதிமன்ற கூண்டில் ஏற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.