நீலகிரிக்கு செல்லும் பேருந்துகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால், அந்த பேருந்துகளை பறிமுதல் செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனம் மற்றும் மலை வாசஸ்தலங்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த விசாரணையின்போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக பொய் அறிக்கை தாக்கல் செய்ததாகக் கூறி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காணொலி காட்சி மூலம் ஆஜரான நீலகிரி மாவட்ட ஆட்சியர், தனது செயலுக்காக மன்னிப்பு கோரினார்.
இதனையடுத்து, நீலகிரிக்கு வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால், அந்த பேருந்தை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், பேருந்துகளின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.