சாதிக்க துடிப்பவர்கள் உயர்ந்த மலைகளை ஊக்கமாகக் கொண்டு தங்கள் இலக்கை அடைவார்கள். ஆனால் இங்கே ஒருவர் அந்த மலை மீதே ஏறி, மேகங்களை தொடுவதையே இலக்காக வைத்து பயணித்துக் கொண்டிருக்கிறார். யார் அவர்? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..!
இவர்தான் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியை சேர்ந்த வெங்கட சுப்ரமணியன். உலகின் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைத் தொடர்களில் ஏறுவதையே தனது வாழ்வில் இலக்காகக் கொண்டுள்ளார்.
யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்பதை போல, கடந்த முறை ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மலை தொடர்களில் ஏறி நிறைவு செய்த வெங்கட சுப்ரமணியன், அதன்பிறகு தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்றிருந்தார்.
உலகின் நீண்ட மலைத் தொடராக பார்க்கப்படுவது தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அகண்காகுவா மலைத் தொடர். இதன் தூரம் சுமார் 6,962 மீட்டர். உயிர் பயமின்றி கடும் சவாலான அகண்காகுவா மலைத் தொடரிலும் ஏறி சாதனை படைத்திருக்கிறார் வெங்கட சுப்ரமணியன்.
அமெரிக்க கண்டத்தில் உள்ள அகண்காகுவா மலைத் தொடர் ஏற்றத்தில் இஸ்ரேல்,ரஷியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக 6,962 மீட்டர் தூரத்தில், 6000 மீட்டரை எட்டியதும் திரும்பி விடலாம் என பலர் சொல்ல, உயிரையும் பொருட்படுத்தாமல் மீதம் இருந்த, 962 மீட்டர் தூரத்தையும் ஏறி நிறைவு செய்துள்ளார் வெங்கட சுப்ரமணியன்.
தமிழ்நாட்டை சேர்ந்த மலை ஏற்ற வீராங்கனையான முத்தமிழ் செல்வியை தனது முன் மாதிரியாகக் கொண்டு, இது போன்ற சாகச பயணங்களை தொடங்கியுள்ளார் வெங்கட சுப்ரமணியன். விவசாயியாக இருக்கும் தனது தந்தை, நிலத்தில் கால் வைப்பது போல், ஒருநாள் இமயமலையின் உச்சியில் கால் தடம் பதிப்பதே தனது எண்ணம் என்கிறார். அடுத்து எவரெஸ்ட் சிகரம் ஏறும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
கடுகளவு துன்பங்களையும் மலையாக கருதி திகைத்துப் போனவர்களுக்கு மத்தியில், மலையையே கடுகாக நினைத்து ஏறி மலைக்க வைக்கும் வெங்கடசுப்ரமணியனின் சாதனை பிறருக்கு உற்சாகம் அளிக்கும் ஊட்டச் சத்துதானே.