தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுற்றுலா தலங்களில் உள்ள மதுபானக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 7 மாவட்டங்களில் பகுதிவாரியாக அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் 97 சதவிகித பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பெறப்பட்ட பணம் தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக உள்ளது என்றும், நீர்நிலை மற்றும் வனபாதுகாப்பு தொடர்பாக அரசு வழக்கறிஞர்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். மேலும், வழக்கு விசாரணையை ஏப்ரம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.