ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஆறு மணியளவில் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
வாக்கு பதிவு நிறைவு பெற்றவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவு வெளியாவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, வீரப்பன்சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுகவைச் சேர்ந்த ஒருவர் அடுத்தடுத்து வாக்குகளை செலுத்தியதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டினர். தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் குண்டுகட்டாக அப்புறப்படுத்தினர்.