மதுரை அறப்போராட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது எம்.பி நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவ உணவு சாப்பிட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனைக் கண்டித்து இந்து அமைப்புகள் கடந்த 4-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த இருந்தனர்.
ஆனால், மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக பாஜக, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் போராட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியதை அடுத்து மாலை 5 மணிக்கு பழங்காநத்தம் பகுதியில் அறப்போராட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்று உரையாற்றினார். இந்நிலையில், 4 பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.