வார இறுதி நாட்கள் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு ஆயிரத்து 320 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வார இறுதி விடுமுறை, சுபமுகூர்த்தம் மற்றும் தைபூசம் விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு, வெள்ளிக்கிழமை 380 பேருந்துகள் மற்றும் சனிக்கிழமையன்று 530 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோயம்பேட்டிலிருந்து, திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையன்று தலா 60 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மாதாவரத்திலிருந்து பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தலா 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.