தொழில் நிமித்தமாக வெளிநாடுகளில் இந்தியர்கள் குடியேறுவதை ஒழுங்குபடுத்தும் வகையில், புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். இந்த நிலையில், வெளிநாடுகளில் இந்தியர்கள் குடியேறுவதை ஒழுங்குபடுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள குடிபெயர்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான வெளியுறவு விவகார நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியது.
இதன்பேரில், சட்டத்திருத்தம் தொடர்பாக பொதுமக்களிடம் 30 நாட்கள் வரை கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், கூடுதலாக ”குடிபெயர்வோர் பாதுகாப்பு ஆணையங்களை” திறக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.