சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 17 மதுபான பார்களில் 3 பார்களுக்கு போலீசார் சீல்வைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வளையமாதேவி டாஸ்மாக் அருகே அனுமதி பெறாத பாரில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் விற்பதாக வீடியோ வெளியானது. இதனை தொடர்ந்து, சேலம் எஸ்பி உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 22 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஆயிரத்து 100 மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயம், ஒரு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அனுமதி இன்றி செயல்பட்டு வரும் 17 பார்களின் பட்டியல் தயார் செய்து அவற்றை மதுவிலக்கு பிரிவு வட்டாட்சியரிடம் அறிக்கையாக சமர்ப்பித்தது. அதன்படி, வளையமாதேவி பார் உள்ளிட்ட 3 பார்களுக்கு போலீசார் சீல்வைத்தனர்.
இதனிடையே, வளையமாதேவி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய டாஸ்மாக் கடையை சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சண்முகநாதன் பார்வையிட்டார். அப்போது, அப்பகுதி பெண்கள், டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதாக வேதனை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக மாவட்ட தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.