சென்னை கிளாம்பாக்கத்தில் வடமாநில இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவருக்கு வரும் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்த இளம்பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி சென்ற சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஆட்டோ ஓட்டுநர் தயாளன், முத்தமிழ்செல்வன் ஆகிய இருவர் மீது, பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், ஆட்டோ உரிமையாளர் வெங்கட் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், முத்தமிழ்செல்வன், தயாளன் இருவருக்கும் கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டிருந்ததால் போலீசார் அவர்களை கைத்தாங்கலாக அழைத்து சென்று, செங்கல்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்கள் இருவரையும் வரும் 21 -ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவர்கள் இருவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.