அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாக குற்றம் சாட்டப்பட்ட 104 இந்தியர்கள், அந்நாட்டின் ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் திரும்பினர். அமெரிக்க அரசால் நாடு கடத்தப் பட்டு, தாயகம் திரும்பியுள்ள ஒவ்வொருவரின் கதையும் கண்ணீரை வர வைக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஹரியானாவைச் சேர்ந்த 33 பேரும், குஜராத்தைச் சேர்ந்த 33 பேரும், பஞ்சாபைச் சேர்ந்த 30 பேரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 3 பேரும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரும், சண்டிகரைச் சேர்ந்த இரண்டு பேரும் என முதல் கட்டமாக 104 இந்தியர்களை அமெரிக்க நாடு கடத்தியுள்ளது.
ராணுவ விமானம் மூலம் அமிர்தசரஸ் வந்தடைந்த அவர்கள் உரிய சோதனை நடைமுறைகளுக்கு பின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப் பட்டுள்ளது.
நாடுகடத்தப்பட்டவர்களின் பட்டியலில் தங்கள் உறவினர்களின் பெயர்களைக் கண்டதும், இரண்டு குடும்பங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
ஒருவர் பஞ்சாபின் தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சுக்பால் சிங். அவரது குடும்பத்தினர், சுக்பால் சிங் இத்தாலியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டிருந்தனர்.
சுக் பால் சிங், அமெரிக்காவுக்குச் செல்லும் கனவில் பல துயரமான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார். 15 மணி நேரம் கடல் வழியாக பயணம் செய்து, ஆபத்தான மலைகள் வழியாக 45 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். தன்னை போல் அமெரிக்கக் கனவில் தன்னுடன் வந்தவர்களில் பலர் நடக்க முடியாமல் விழுந்து விட்டதாகவும் , வழியில் பல சடலங்களைக் கண்டதாகவும் சுக் பால் சிங்,தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு சற்று முன்பாக மெக்சிகோவில் சுக் பால் சிங் பிடிபட்ட போது அவரது அமெரிக்க கனவு சுக்கு நூறாக நொறுங்கி போனது.
14 நாட்கள் இருண்ட அறையில் அடைக்கப்பட்டதாகவும், கொடுமையான நிலையில் நாடு திரும்பியுள்ளதாகவும் கூறியுள்ள சுக்பால் சிங், சட்டவிரோதமானவழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்க மற்றவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பஞ்சாபின் தஹ்லி கிராமத்தைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங்கின் கதை பரிதாபமானது. அமெரிக்காவில் வேலை செய்வதற்கான விசா வாங்கி தருவதாக கூறிய முகவரிடம் 42 லட்சம் ரூபாய் கட்டியிருக்கிறார் ஹர்விந்தர் சிங்.
விசா கிடைக்கவில்லை என்று கடைசி நேரத்தில் கூறிய முகவர், அதற்குப் பதிலாக, முதலில் கத்தாருக்கு அனுப்பி வைத்ததாகவும், பிறகு பல விமானங்களில் மாறி மாறி பிரேசில் வந்து சேர்ந்ததாகவும் ஹர்விந்தர் சிங் கூறியுள்ளார்.
பிரேசிலில் பெரு நாட்டுக்குச் செல்ல விமானம் வரும் என்று சொன்னார்களே ஒழிய விமானம் வரவே இல்லை. கடைசியாக டாக்சி மூலம் கொலம்பியாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். பனாமாவில் கப்பல் வரும் என்று சொன்னார்கள். ஆனால் கப்பல் வரவே இல்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அமெரிக்கா செல்லும் கழுதை பாதையில் நடக்கத் தொடங்கியதாக ஹர்விந்தர் சிங் கூறியுள்ளார்.
ஹர்விந்தர் சிங்கையும், அவரைப் போல வந்த மற்றவர்களையும் , ஒரு சிறிய படகில் கடல் வழியாக மெக்சிகோ எல்லையை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
நான்கு மணி நேர கடல் பயணத்தில்,படகு கவிழ்ந்து உடன் வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்னொருவர் பனாமா காட்டில் உயிரிழந்துள்ளார். இந்த மொத்தப் பயணத்திலும் கைப்பிடி அளவு அரிசியை மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்துள்ளனர்.
இதே போல், ஆசிஸ் சிங், தனது மகன் விக்ரம்ஜித் சிங்கை நிலத்தை அடமானம் வைத்து சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் டங்கி பாதை வழியாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்காக, பெரிய கடனைப் பெற்றதாகவும் விக்ரம்ஜித் சிங்கின் தாத்தா கூறியுள்ளார். நாடு கடத்தப் பட்டு, பேரன் ஊருக்குத் திரும்பியதே அதிர்ஷ்டம் என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள் விக்ரம்ஜித் சிங் குடும்பத்தினர்.
இன்னொருவர், பகதூர் கிராமத்தைச் சேர்ந்த சோனு அட்வால் என்றும் அழைக்கப்படும் குர்பிரீத் சிங், சோள வயல்களில் விவசாய வேலை பார்த்து வந்திருக்கிறார். முகவருக்கு 35 லட்சம் ரூபாய் கொடுத்து ,கடந்த ஆண்டுதான் அமெரிக்கா சென்றிருக்கிறார். அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அகதி முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். குர்பிரீத் சிங் நாடுகடத்தப்பட்ட செய்தி கேட்டு மனமுடைந்த அவரது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. லோஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குர்பிரீத் சிங் அமெரிக்க செல்வதற்காக, அவரின் தந்தை 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
வறுமையிலிருந்து தப்பித்து சிறந்த வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையில், பல இந்திய இளைஞர்கள் அமெரிக்காவுக்கு செல்ல ஆசைப்படுகின்றனர். பிள்ளைகளின் பிரகாசமாக எதிர்காலத்துக்காக தங்கள் நிலத்தை விற்றும், அதிக கடன்களை வாங்கியும் தங்கள் பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கின்றனர் அப்பாவி பெற்றோர்.
கட்டியெழுப்ப நினைத்த வாழ்வின் கனவுகள் எல்லாம் உடைந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். வெறும் கைகளுடன் மட்டுமல்ல, கடன்சுமையுடன் திரும்பி இருக்கிறார்கள்.
வெளிநாட்டில் சிறந்த வாழ்க்கையை தேடாத வகையில் உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படவேண்டும். அப்போது தான், டங்கி பாதையை தேர்ந்தெடுப்பது தானாக மறையும்.