தேனியில் இலவசமாக இறைச்சி கொடுக்காத ஆத்திரத்தில், புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து கறிக்கடை முன்பு வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பழனிச்செட்டிப்பட்டியில் கறிக்கடை நடத்தி வருபவர் மணியரசன். இவர் தனக்கு பழக்கமான சுடுகாட்டில் பணியாற்றி வரும் குமார் என்பவருக்கு இலவசமாக இறைச்சி வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை கறிக்கடைக்கு வந்த குமார், மணியரசனிடம் இலவசமாக இறைச்சி வழங்குமாறு கேட்டுள்ளார்.
அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் குமாருக்கு இலவசமாக இறைச்சி வழங்க மணியரசன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமார் அங்கிருந்து கிளம்பிச் சென்று, சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளார். பின்னர் அந்த சடலத்தை எடுத்து வந்து மணியரசனின் கறிக்கடை முன்பு வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், உடலை வீசிவிட்டு தப்பிச் சென்ற குமாரரை தேடி வருகின்றனர்.