விருதுநகரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று குலதெய்வ வழிபாடு நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வனப்பேச்சியம்மனை வழிபட்டு வருகின்றனர். .
குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் ஊருக்கு வெளியே, மலையடிவாரத்தில் உள்ள வனப்பேச்சியம்மன் கோயிலில் ஒன்றுகூடி வழிபாடு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவையொட்டி நேற்று மாலை, வீடுகளை விட்டு வெளியேறிய ஆண்கள் அனைவரும் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள வனப்பேச்சி அம்மன் கோயிலில் ஒன்று கூடினர்.
பின்னர் சைவ உணவுகளை சமைத்து அம்மனுக்கு படையலிட்டு, சமபந்தி உணவருந்தி விடிய விடிய வழிபாடு நடத்தினர். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான ஆண்கள் இந்த திருவிழாவில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.