சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 31 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்கா பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில், பல்வேறு பாதுகாப்பு குழுக்களைச் சேர்ந்த வீரர்கள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. முதல்கட்ட தகவலின் படி, 31 நக்சல்கள் இந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் அனைவரது உடல்களும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனிடையே நக்சல்களுடனான சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்ததாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் ஆபத்தான கட்டத்தை கடந்து விட்டதாகவும், சிறப்பான சிகிச்சைக்காக அவர்கள் வேறு மருத்துவனைக்கு மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.