இந்தியாவின் மற்றொரு கும்பமேளா விழாவாக விமான கண்காட்சி தொடங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் 15வது விமானப்படை கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்தியாவின் வான்வழி வலிமையையும், உள்நாட்டு அதிநவீன கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்தப்படுகின்றன. 50 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 900க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த கண்காட்சியில் 30 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
ஏரோ இந்தியா கண்காட்சியில், விமானப்படையின் விமானங்கள் வான்வெளி சாகசங்களில் ஈடுபட்டன. வானில் பறந்தபடி சாகசங்களில் ஈடுபட்ட சூரிய கிரண் ஏரோபாட்டிக் குழு மற்றும் தேஜஸ் போர் விமானங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் மகா கும்பமேளா வெகு விமரிசையாக நடைபெறும் நிலையில், மற்றொரு கும்பமேளா விழாவாக ஏரோ இந்தியா கண்காட்சி தொடங்கியுள்ளதாக கூறினார்.
பிரயாக்ராஜின் மகா கும்பமேளா இந்தியாவின் கலாச்சாரத்தையும், பெங்களூரு ஏரோ மகா கும்பமேளா இந்தியாவின் வலிமையையும் காட்டுகிறது எனவும் தெரிவித்தார்.
பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உறவுகளை மேம்படுத்த நமது விமானப்படை பெரும் பங்கு வகிக்கிறது எனக்கூறிய அவர், பலவீனமான சூழலில் அமைதியை ஒருபோதும் அடைய முடியாது என குறிப்பிட்டார். உலகம் முழுவதும் நிச்சயமற்ற சூழல் காணப்படும் நிலையில், அமைதியையும் செழிப்பையும் காணக்கூடிய ஒரு பெரிய நாடு இந்தியா திகழ்கிறது என தெரிவித்தார்.