சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர். செங்கல்பட்டு மாவட்டங்களில், பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் உள்ள நிலங்களுக்கு உரிமையாளர்களின் பெயரில் பட்டா வழங்க, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மார்ச் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ள நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏராளமான பொதுமக்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யப்படாமல் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ‘சர்க்கார் பட்டா’ என்ற அளவில் உள்ளன. இவற்றை வகை மாற்றம் செய்து அந்தந்த உரிமையாளர்களின் பெயரில் பட்டா வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.