அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை தொடர்ந்து மூத்த தலைவர் செங்கோட்டையனும் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உட்கட்சி பிரச்னைகளை சமாளிக்க முடியாத எடப்பாடி பழனிசாமி, அடுத்த வரும் சட்டமன்றத் தேர்தலை எப்படி சந்திக்கப்போகிறார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
அதிமுகவின் கிளை தொடங்கி மாவட்டம் வரையிலான அனைத்து நிலையிலான பிரிவுகளையும் வலுப்படுத்தும் வகையிலும், உட்கட்சியில் நிலவும் பிரச்னைகளை களையும் வகையிலும் அமைக்கப்பட்ட கள ஆய்வுக்கூட்டம் தமிழகம் முழுவதும் தங்களின் கள ஆய்வை நடத்தி தங்களின் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கள ஆய்வு கலவரமாக மாறிய நிலையில், சென்னையில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் எந்தவிதமான சலசலப்புகளும் நிகழக்கூடாது என அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, சென்னையில் நடைபெற்ற கள ஆய்வுக்கூட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று நிர்வாகிகளின் பிரச்னைகளை கேட்டறிந்து அதனை தீர்ப்பதற்கான வழிகளை சொல்ல வேண்டிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, தன்னோட பிரச்னைகளை கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தனக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை, தன்னுடைய பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்துவதில்லை என ஆதங்கப்பட்ட கோகுல இந்திரா, தன் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தினால் பதவி பறிபோய்விடும் என சிலர் அஞ்சுவதாகவும் பேசியது நிர்வாகிகள் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது ஒருபுறம் இருக்க, அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றித் தந்ததாக கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் புறக்கணித்திருப்பது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தொடங்குவதற்கு அடித்தளமிட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்க கூடாது என முடிவு செய்த செங்கோட்டையன் அந்த நிகழ்வை புறக்கணித்திருக்கிறார்.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என அதிமுக நான்காக பிரிந்திருக்கும் நிலையில், மூத்த நிர்வாகிகளான கோகுல இந்திரா மற்றும் செங்கோட்டையனின் தலைமைக்கு எதிரான பேச்சு அதிமுகவில் ஏற்கனவே தலைவிரித்தாடும் உட்கட்சி பூசலை மேலும் வலுவாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் கள ஆய்வு நடைபெற்று முடிந்து அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கையின் படி செயல்படாத நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்பட்டு புதியவர்களுக்கு பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாத இறுதியில் இருந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவின் மூத்த தலைவர்கள் செயல்படும் விதம் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சிக்குள்ளாக நடைபெறும் உட்கட்சி பூசலையே சரிகட்ட முடியாத எடப்பாடி பழனிசாமி, மக்களை சரிகட்டி தேர்தலில் எப்படி வெல்வார் என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளோடு, அனைத்து பகுதிகளிலும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டமும் திமுக அரசு மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பிரச்னைகளை சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியோ, தன் கட்சிக்குள்ளாக நடைபெறும் உட்கட்சி பிரச்னை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் விமர்சனமும் பரவலாக எழுந்துள்ளது.
தேர்தலுக்கு ஒரு வருடம் மட்டுமே கால அவகாசம் இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி உட்கட்சி பிரச்னைகளை உடனடியாக சீர்செய்தால் மட்டுமே மக்கள் பிரச்னைகளில் முழு கவனத்தை செலுத்த முடியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.