தண்டனை கைதிகளின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது, அவர்களுக்கு விடுப்பு வழங்க எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு சிறைகளில் உள்ள தண்டனை கைதிகள், தங்களின் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும்போது விடுப்பு வழங்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவற்றை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியதால், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
விசாரணைக்கு பிறகு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், கைதிகளின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது, சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்த தடையும் இல்லை என தெரிவித்தனர்.
விடுப்பு வழங்க கைதிகளின் தண்டனை காலத்தை கணக்கிடும்போது, கீழமை நீதிமன்றத்தில் தண்டனை வழங்கிய நாள் மற்றும் தண்டனைக்கு முன் சிறையில் இருந்த விசாரணை நாட்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் எனவும் கூறினர்.
மேலும் தண்டனைக் கைதிகளுக்கு எதிராக வேறு வழக்கு விசாரணையில் இருந்தால், அந்த கைதிக்கு விடுப்பு பெற தகுதியில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள்,
அனைத்து விதிகளுக்கும் விலக்கு அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என தெளிவுபடுத்தினர்.