கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டில் இணைய பயனர்களின் எண்ணிக்கை 4.5 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் ‘இணைய பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றம்’ என்ற தலைப்பில் உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் கூட்டம் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ‘இணைய பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றம் ‘ தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் இயற்கையாகவே இணையவழிக் குற்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இது வழிவகுத்துள்ளதாகவும் கூறினார்.
‘மென்பொருள்’, ‘சேவைகள்’, ‘பயனர்கள்’ மூலம் இணைய மோசடிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து நாம் பரிசீலிக்கும் வரை, இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பது சாத்தியமற்றது என்று அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவை இணைய –பாதுகாப்பான நாடாக மாற்றுவதற்கு பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.
இணைய குற்றங்கள் அனைத்து எல்லைகளையும் கடந்து நடைபெறுவதாகவும், அதற்கு வரம்புகள் அல்லது நிலையான வடிவம் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியா ஒரு ‘டிஜிட்டல் புரட்சியை’ கண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று, நாட்டில் 95 சதவீத கிராமங்கள் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருஅவர் லட்சம் கிராம பஞ்சாயத்துகள் வைஃபை ஹாட்ஸ்பாட் வசதிகளுடன் உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டில் இணைய பயனர்களின் எண்ணிக்கை 4.5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் 2024-ம் ஆண்டு யுபிஐ வசதி மூலம் ரூ.17.221 லட்சம் கோடி மதிப்பிலான 246 டிரில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2024-ம் ஆண்டில், சர்வதேச அளவில் டிஜிட்டல் வழி பரிவர்த்தனைகளில் 48 சதவீதம் இந்தியாவில் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 2023-ம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்களிப்பு சுமார் ரூ.32 லட்சம் கோடியாக இருந்ததாகவும், இதன் மூலம் 15 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இணையவழிக் குற்றங்களைத் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை அமித் ஷா வலியுறுத்தினார். இணையவழி நிதி மோசடியைக் கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை வழங்கும் உதவி தொலைபேசி எண் 1930 ஒற்றைச் சாளர தீர்வுகளை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், குழுவின் உறுப்பினர்கள், மத்திய உள்துறை செயலாளர், மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.