அமெரிக்காவில் கடந்த காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட அதிபர் ஜான் எஃப். கென்னடி, அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி, கறுப்பின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோர் மரணம் தொடர்பான அனைத்து ரகசிய கோப்புகளையும் வெளியிட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
அதிபர் டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, மூன்று அமெரிக்கத் தலைவர்களின் படுகொலைகள் தொடர்பான இரகசியங்கள் வெளிவருமா ? என அமெரிக்கர்கள் மட்டுமின்றி உலகமே ஆவலுடன் காத்திருந்தது. இந்நிலையில், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியின் படுகொலை தொடர்பாக முன்னர் வெளியிடப்படாத இரகசிய பதிவுகளை அமெரிக்காவின் FBI கண்டுபிடித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்க வரலாற்றில் ஆபிரகாம் லிங்கன், ஜேம்ஸ் ஏ. கார்பீல்ட், வில்லியம் மெக்கின்லி, ஜான் எஃப். கென்னடி ஆகிய நான்கு முன்னாள் அதிபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் மிகவும் சர்ச்சைக்குரியது அமெரிக்காவின், 35வது அதிபராக பதவி வகித்த ஜான் எஃப். கென்னடியின் படுகொலை தான்.
1963ம் ஆண்டு. பனிப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம். வியட்நாம் யுத்தம், கியூபா பிரச்னை என தொடர்ந்து சறுக்கல்களைச் சந்தித்து கொண்டிருந்தது அமெரிக்கா. அதே காலகட்டத்தில், கியூபாவில் ரஷ்யா தனது ஏவுகணை தளத்தை அமைத்தது,அமெரிக்காவுக்குத் தலைக்கு மேல் பிரச்னை அதிகமானது.
தனது சாதுர்யத்தால், ரஷ்யாவின் ஏவுகணை தளம் வரவிடாமல் தடுத்தார் அதிபர் ஜான் எஃப் கென்னடி. மேலும், 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, பிரிட்டன், ரஷ்யா ஆகிய இரண்டு அணுசக்தி நாடுகளுடன் அமெரிக்கா-பிரிட்டன்-சோவியத் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக அளவில் அதிபர் ஜான் எஃப். கென்னடிக்கு பாராட்டுகள் குவிந்தன. செல்லும் இடமெல்லாம் கைகுலுக்கல்கள், ஆரவாரம் என மக்கள் மத்தியில் கென்னடிக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த சூழலில், அதே ஆண்டு, நவம்பர் 22ஆம் ஆண்டு, டெக்சாஸ் மாகாணத்தின் `டாலாஸ்’ நகரில், காரில் மெதுவாகச் சென்றபடியே மக்களைப் பார்த்து கையசைத்து கொண்டே சென்ற கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
கென்னடி சுடப்பட்ட அடுத்த 70-வது நிமிடத்தில் லீ ஹார்வி ஆஸ்வல்ட் என்ற முன்னாள் கடற்படை வீரர் கைது செய்யப்பட்டார். கென்னடி கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களில், போலீஸ் காவலில் இருந்த போது, `ஜாக் ரூபி’ என்பவரால் லீ ஹார்வி சுட்டுக் கொல்லப்பட்டார். `ஜாக் ரூபி’ ஒரு மன நோயாளி என விசாரணையில் கூறப்பட்டது. அடுத்த 4 ஆண்டுகளில், சிறையிலேயே `ஜாக் ரூபி’ மரணமடைந்தார். அவர் மரணத்துக்குப் புற்றுநோய் காரணம் என்று கூறப்பட்டது.
அதிபர் கென்னடியை ஆஸ்வல்டு எதற்காகச் சுட்டார்? அவரின் பின்னணி என்ன? அவரைத் தூண்டியது யார்?ஆஸ்வல்டை சுட்ட ஜாக் ரூபி யார்? ஆஸ்வல்டுக்கும் ஜாக் ரூபிக்கும் என்ன தொடர்பு ? ஜாக் ரூபி உண்மையிலேயே மனநோயாளி தானா ? என கென்னடி கொலை தொடர்பாக ஏராளமான கேள்விகள் எழுந்தன.
அதிபர் கொலை செய்யப்பட்டதால், உடனேயே அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட துணை அதிபர் லிண்டன் ஜான்சன், கென்னடி படுகொலை செய்யப்பட்டதையும், அதற்கான காரணங்களையும் விசாரிக்க, வாரன் கமிஷன் என்ற பெயரில் விசாரணை ஆணையம் அமைத்தார்.
சுமார் 14,000 பக்கங்கள் கொண்ட கென்னடி படுகொலைப் பதிவுகளை, மறுஆய்வு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். மறுஆய்வுகள் முடிந்த பின் அனைத்து ஆவணங்களையும், தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும். 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் அனைத்து ஆவணங்களையும் அரசு வெளியிட வேண்டும் என்று 1992ஆம் ஆண்டு அமெரிக்க அரசு கொண்டுவந்த JKF படுகொலை சட்டம் கூறியது.
தனது முதல் பதவி காலத்தில் ட்ரம்ப், ஆயிரக்கணக்கான பக்கங்களை வெளியிட்டாலும் தேசியப் பாதுகாப்பின் அடிப்படையிலும் , CIA இன் ஆலோசனையாலும் மற்றவற்றை ட்ரம்ப் முடக்கி வைத்தார்.
46வது அதிபராக பதவியில் இருந்த ஜோ பைடன், கென்னடி படுகொலை குறித்த ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிடுவதற்கான உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சுமார் 1,500 ஆவணங்களை வெளியிட்ட ஜோ பைடன்,
முக்கிய சில ரகசிய கோப்புகள் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வரை மறைத்து வைக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், 515 ஆவணங்கள் முழுமையாக நிறுத்தி வைக்கப்படும் என்றும், மேலும் 2,545 ஆவணங்கள் பகுதியளவு நிறுத்தி வைக்கப்படும் என்றும் அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகம் தெரிவித்தது.
இந்நிலையில், அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவின்படி, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியின் படுகொலை தொடர்பான சுமார் 2,400 புதிய ரகசிய ஆவணங்களை மத்திய புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அனைத்து ஆவணங்களும் வரும் மார்ச் 9ம் தேதிக்குள் முழுமையாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின்னும், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியின் படுகொலை குறித்த புதிய ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.
JKF இறந்துவிட்டார். ஆனாலும் அவர் மரணம் சார்ந்த அனைத்தும் இன்று வரை மர்மமாகவே உள்ளது.