தமிழக பள்ளிகளில் மாணவ மாணவிகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நீதிமன்றம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தைகள் நல ஆணையம் உள்ளிட்டவற்றுக்கு பாஜக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக ஆளுநர், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், பள்ளிக்கல்வி துறை செயலாளர், டிஜிபி,தேசிய குழந்தைகள் நல ஆணையம் ஆகியோருக்கு தமிழக பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ. மோகன்தாஸ் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், அண்மையில் கிருஷ்ணகிரி பள்ளியில் மாணவியை ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது, ஏற்காடு பள்ளியில் படித்து வந்த 10 பழங்குடியின மாணவிகளுக்கு அப்பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்தது என தினந்தோறும் தமிழகத்தில் சிறார் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் சிறார் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பது தொடர்பாக வகுத்துள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சரியாக அமல்படுத்தாமல் மாணவர்கள் பாதுகாப்பில் தோல்வி அடைந்து விட்டதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் பள்ளி மாணவ,மாணவியர், மற்றும் சிறார்களுக்கு பாலியல் குற்றங்கள் அளிக்கப்பட்டதாக 18 ஆயிரத்து 518 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 4 வது இடத்தில் இருப்பதாகவும், போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இல்லாத நிலை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு பாலியல் தொல்லை அளிக்கும் ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் மூலம் உரிய தண்டனையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.