வேலூர் அருகே மலை உச்சியில் கோயிலை சேதப்படுத்தி புதையல் தேடிய நபர்களை கைது செய்யக் கோரி இந்து முன்னணி அமைப்பு சார்பில் வனத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் சிவநாதபுரம் மலை உச்சியில் பழமை வாய்ந்த ஆதி கைலாசநாதர் சிவன் கோயில் உள்ளது. இங்கு புதையல் இருப்பதாக நினைத்து சிலர், கோயில் சுவர்களில் உள்ள கற்களை உடைப்பதாகவும் கூடாரம் அமைத்து தங்கியிருப்பதாகவும் அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் அவர்கள் அனைவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். மேலும், அச்சமடைந்து அங்கிருந்து தப்பியோடினர்.
இதுதொடர்பாக மாவட்ட வனத்துறை அலுவலரிடம் இந்து முன்னணி அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் புதையல் இருப்பதாக கோயில் சுவரை சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.