நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் நிலத்தை விவசாய நிலமாக மாற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், சோலூர் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்கால் நிலங்களை தனியார் விவசாய நிலங்களாக மாற்றி, ஆக்கிரமித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிலத்தில், 70 சதவீத நிலத்தை பிறர் பயன்படுத்தி வருவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.
தற்போது விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் 390 ஏக்கர் பரப்பு நிலத்தை மேலும் விரிவடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இனி பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு அடி நிலம் கூட விவசாய நிலங்களாக மாற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என வனத்துறைக்கு ஆணையிட்டனர்.
390 ஏக்கர் பரப்பளவை அளவீடு செய்து எல்லையை வரையறுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.