இரண்டு நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கியமான தலைவர்கள் மட்டுமே தங்கும் பிளேர் மாளிகையில் மோடி தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறப்பு வரவேற்பு ஏன்? பிளேர் மாளிகையின் சிறப்புகள் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப், கடந்த ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்றார். ட்ரம்ப் பதவி ஏற்பு விழாவில், பல நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்ற ட்ரம்பின் பதவியேற்பு விழாவில், இந்தியாவுக்குத் தான் முதல் மரியாதை அளிக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதிபரான ஏழு நாட்களுக்குள் ட்ரம்ப், பிரதமர் மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அதிபர் ட்ரம்பும், பிரதமர் மோடியும் தனிப்பட்ட முறையில் நெருங்கிய உறவை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக, இருவருக்கும் இடையே நடந்த உயர்மட்ட சந்திப்புகள் மற்றும் இருவரும் கலந்து கொண்ட பிரத்யேக பொது நிகழ்ச்சிகளில் தெளிவாக தெரிய வந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஹூஸ்டனில் நடைபெற்ற “ஹவுடி மோடி” நிகழ்ச்சி மற்றும் , 2020 ஆம் ஆண்டு ட்ரம்பின் அகமதாபாத் வருகையும் இந்த உறவுக்குச் சிறந்த சான்றாகும்.
வலிமையான தலைமை பண்புடைய அதிபர் ட்ரம்பும், பிரதமர் மோடியும், தேசம் முதலில் என்ற கொள்கையால் தேசியவாத பொருளாதாரத்துக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, அவர் தங்கும் பிளேர் மாளிகையில் அமெரிக்கக் கொடி அகற்றப் பட்டு, மூவர்ணக் கொடியால் அலங்கரிக்கப்பட்டது. ஏராளமான இந்திய அமெரிக்கர்கள் பிரதமரை வரவேற்க கூடியதால் பிளேர் மாளிகை உற்சாகத் திருவிழாவாக மாறியது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் “பாரத் மாதா கி ஜெய்” மற்றும் “மோடி, மோடி” என்ற உற்சாக கோஷங்கள் வாஷிங்டன் காற்றில் பலமாக எதிரொலித்தன.
வெள்ளை மாளிகைக்கு நேர் எதிரே, 1651 பென்சில்வேனியா அவென்யூவில் அமைந்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க வீடு சாதாரண விருந்தினர் மாளிகை அல்ல. இராஜதந்திர மகத்துவத்தின் சின்னமாகும்.
முன்னாள் இந்தியப் பிரதமர்கள் நேரு மற்றும் இந்திரா காந்தி, இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், பிரான்ஸ் அதிபர் சார்லஸ் டி கோல், கோல்டா மெய்ர், ஷிமோன் பெரெஸ் மற்றும் யிட்சாக் ராபின் ஆகிய இஸ்ரேல் பிரதமர்கள் மற்றும் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இந்த பிளேர் மாளிகையில் தங்கியுள்ளனர்.
பல்வேறு நாட்டு அதிபர்கள் , அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உலகத் தலைவர்களை வரவேற்றுள்ள , “உலகின் மிகவும் பிரத்யேக ஹோட்டல்” என்று புகழப்படுகிறது.
1824 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பிளேர் மாளிகை, 1837ம் ஆண்டு பிளேர் குடும்பம் இங்கு குடியேறியபோது வாஷிங்டனின் ஒரு அரசியல் மையமாக மாறியது.
இது வெள்ளை மாளிகையின் 70,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஆடம்பரமான கட்டிடமாகும். வெள்ளை மாளிகையின் 7,000 சதுர அடி விரிவாக்கமான அமைந்துள்ள இந்த பிளேர் மாளிகை, ஐந்து நட்சத்திர வடிவமைப்புடன், ஆடம்பரமான தங்குமிடங்கள், பழங்கால அழகுப் பொருட்கள், நுண்கலை மற்றும் ஏராளமான வரலாற்று கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது.
அமெரிக்க வரலாறு மற்றும் கைவினைத்திறனை பிரதிபலிக்கும் வகையில் பிளேர் மாளிகை வடிவமைக்கப் பட்டது. 4 விருந்தினர் படுக்கையறைகள், 35 குளியலறைகள், மூன்று வகையான சாப்பாட்டு அறைகள் மற்றும் ஒரு முழுமையான அழகு நிலையம் உட்பட 119 அறைகள் இந்த பிளேர் மாளிகையில் உள்ளன.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் நெறிமுறைத் தலைவர் அலுவலகத்தால் இயக்கப்படும்
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பிளேர் மாளிகையில் தங்குவதற்கு அமெரிக்க அதிபரின் அழைப்பு மிக முக்கியமான மரியாதையாகும். அது பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.
சீனாவை எதிர்கொள்வதில் அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி கடை பிடிக்கும் ஒரே மாதிரியான அரசியல் கண்ணோட்டம், இருவருக்குமான உறவு மேலும் வலிமையாக வைத்துள்ளது. இது அமெரிக்க – இந்திய கூட்டுறவையும் பலப்படுத்தியுள்ளது.
மேலும், ட்ரம்ப் இந்தியாவை அடிக்கடி விமர்சித்தாலும் பிரதமர் மோடியை ஒருபோதும் விமர்சித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் போர் பற்றிய பிரதமர் மோடியின் நிலைப்பாடு, ரஷ்ய அதிபர் புதினையோ, அல்லது ரஷ்யாவையோ விமர்சிக்காமல் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ட்ரம்பின் நிலைப்பாட்டையே எதிரொலிக்கிறது.
இதனால் தான், பிரதமர் மோடி- அதிபர் ட்ரம்ப் சந்திப்புக்கு முன்னதாக, ரூபாய் மதிப்பு 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் உயர்ந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2 நாட்களில் 12 பில்லியன் டாலர்களை விற்றுள்ளது. இந்த டாலர் விற்பனை மூலம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாக சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் வேகத்தில் வளர்ந்துவரும் சூழலில், இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ட்ரம்பை கையாள்வதே மிகப்பெரும் சவால். அந்த சவாலை சாதுரியமாக செய்து முடிப்பார் பிரதமர் மோடி என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.