விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த எல்கேஜி மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரி, சிறுமியின் தந்தை பழனிவேல், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்தது தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், பள்ளி நிர்வாகம் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், குழந்தை மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளதால், விசாரணையை மாற்ற வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி. தலைமையில் புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து, வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடித்து, 12 வாரங்களில் இறுதி அறிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, சிசிடிவி காட்சிகளை மாணவியின் தந்தையிடம் வழங்கவும் ஆணையிட்டார்.
மேலும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற மறுப்பு தெரிவித்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.