திராவிட மாடல் ஆட்சியில் தொடரும் சாதிய வன்கொடுமைகளுக்கு என்னதான் தீர்வு என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சிவகங்கையில் மாணவர் மீதான தாக்குதல் சம்பவம், திமுக ஆட்சியில் சாதியத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது என்ற அபாயத்தை உணர்த்துவதாக கூறியுள்ளார்.
சாதி இரண்டொழிய வேறில்லை என்று போதித்த தமிழ்ச் சமூகத்தில், தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம்? எனவும் முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்குநேரி கொடூரத்தின் ஈரம் காயும் முன்பு சிவகங்கையிலும் சாதிய வன்முறை தலைதூக்குகிறது என்றால், உங்கள் இரும்புக்கரங்கள் இத்துப்போய்விட்டது என்பதுதான் உண்மை எனவும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகளின் கள்ளமௌனம் மக்களிடையே கனத்த சந்தேகத்தை எழுப்புகிறது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கை சாதிய வன்முறைத் தாக்குதலுக்கு உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும், இனியும் இதுபோன்ற கொடுமை நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.