சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்காமல் சென்றதை தட்டிக்கேட்ட பயணியை ஓட்டுனர், நடத்துனர், நேரக்காப்பாளர் ஆகியோர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
மதுரைவாயல் பகுதியை சேர்ந்த சரவணகுருநாதன், பூந்தமல்லி செல்லும் பேருந்துக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார். பூந்தமல்லி செல்லும் பேருந்து வந்தபோது அதில் சரவணகுருநாதன் ஏற முயன்றுள்ளார். ஆனால் பேருந்தை ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சரவணகுருநாதன், நேரக்காப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே, சரவணகுருநாதனை நேரக் காப்பாளர், ஓட்டுனர், நடத்துனர் ஆகியோர் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பயணியை தாக்கிய பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் நேர கண்காணிப்பாளர் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.