மனைவியை அவர் வேலை செய்யும் இடத்திற்கே சென்று, கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். எங்கு நடந்தது இந்த கொடூர சம்பவம்? கொலைக்கான காரணம் என்ன? பின்வரும் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகேயுள்ள செங்குந்தபுரம் வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபால் – மணிமேகலா தம்பதியர். இவர்களுக்கு 10 மற்றும் 7 வயதில் இரு மகன்கள் உள்ள நிலையில், கோபால் வெல்டிங் மற்றும் ஐஸ் விற்கும் வேலைகளுக்கு சென்று வருமானம் ஈட்டி வந்துள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோபால் தினசரி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றதால், அவருக்கும் மனைவி மணிமேகலாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையே கோபால் மணிமேகலாவின் செல்போனில், அவர் தனது ஆண் நண்பருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதுபற்றி கேட்டு கோபால் சண்டையிட்ட நிலையில், மணிமேகலா சேர்ந்து வாழ விருப்பமில்லை என கூறியுள்ளார்.
இதனால் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி சித்தோடு காவல் நிலையத்தில் கோபால் முறையிட்டுள்ளார். அதனடிப்படையில் போலீசார் மணிமேகலாவை காவல் நிலையம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது போலீசாரிடமும் தனக்கு கணவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என மணிமேகலா கூற, நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று பிரிந்துகொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய கோபால் சென்னிமலை சாலையில் உள்ள ஐடிஐ அருகே தங்கி வந்துள்ளார். பின்னர் தனியாக இரு மகன்களையும் கவனித்துக்கொள்ள தொடங்கிய மணிமேகலா, சித்தோடு வசுவப்பட்டியில் உள்ள மிக்சர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக மணிமேகலா பள்ளியில் தன்னுடன் படித்த, கறிவெட்டும் தொழிலாளியான மோகன்ராஜுடன் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மணிமேகலா மிக்சர் கம்பெனியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த கோபால், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிமேகலாவை சக தொழிலாளர்கள் மீட்டு சித்தோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிமேகலா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே கோபால் சித்தோடு கிராம நிர்வாக அலுவலர் முன்பு கொலை செய்த கத்தியுடன் சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில் சித்தோடு போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
சேர்ந்து வாழுமாறு பலமுறை எடுத்துக்கூறியும் கேட்காமல், ஆண் நண்பருடன் ஒன்றாக வாழ்ந்து வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், மணிமேகலாவை கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
தொடர்ந்து கோபாலை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாய் கொலை செய்யப்பட்ட நிலையில் தந்தையும் சிறைக்கு சென்றதால், அவர்களின் விவரமறியாத இரு மகன்கள் நிர்க்கதியாக நிற்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.