வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் அமெரிக்க இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள், உளவுத்துறை ஒத்துழைப்புகள், தொழில்நுட்ப அறிவு பரிமாற்றங்கள் குறித்து விவரித்தனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
47-வது அமெரிக்க அதிபராக பதவியேற்ற மூன்று வாரங்களுக்குள், அதிபர் ட்ரம்பை சந்தித்த நான்காவது அயல்நாட்டுத் தலைவர் பிரதமர் மோடி ஆவார்.
இதுவே ட்ரம்ப் நிர்வாகம் பிரதமர் மோடிக்கு தந்த மரியாதையையும், இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
அதிபர் ட்ரம்பின் அழைப்பை ஏற்று, இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க சென்ற பிரதமர் மோடிக்கு பிரத்யேக மரியாதையும் வரவேற்பும் வழங்கப்பட்டன.
முக்கிய சிறப்பு விருந்தினர்கள் மட்டுமே தங்க வைக்கப்படும் பிளேயர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.
இதனை தொடர்ந்து, அதிபரின் ஓவல் அலுவலகத்தில் பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் பேச்சுவார்த்தை நடத்தினர். வர்த்தக உறவுகள், குடியேற்றம், இராணுவத் தளவாட விற்பனை, அணு தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் இருநாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர்.
இந்த ஆண்டு முதல், இந்தியாவுக்கு அதிக அளவிலான ராணுவத் தளவாடங்களை விற்பனை செய்ய உள்ளதாக கூறிய அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு F-35 ஸ்டெல்த் ரக போர் விமானங்களை வழங்குப் போவதாகவும் உறுதியளித்தார்.
இந்தியா- சீனா, இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ராணுவப் பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் அதிநவீன F-35 ஸ்டெல்த் ரக போர் விமானங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்குவது அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தியாவின் எரிவாயு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
2030ம் ஆண்டுக்குள் இரு நாடுகளின் வர்த்தக பரிவர்த்தனை 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. விரைவில் இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிபர் ட்ரம்பின் MAKE AMERICA GREAT AGAIN என்ற கொள்கையை சற்று மாற்றி, MAKE INDIA GREAT AGAIN என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி “MIGA மற்றும் MAGA இணைந்து வளமையான MEGA கூட்டாண்மையாக மாறியுள்ளன என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கூடுதலாக, இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க முடிவெடுத்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி, அதற்காக தன்னாட்சி அமைப்பு தொழில் கூட்டணியை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அடுத்த பத்தாண்டுகளுக்கு, பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கட்டமைப்புக்களும் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளனர்.
உலக வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தகப் பாதைகளில் ஒன்றை உருவாக்கும் முயற்சியில், அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்படும் என்றும் அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம், முதலில், இந்தியாவிலிருந்து இஸ்ரேல் முதல் இத்தாலி வரை இயக்கப்படும் என்றும், பிறகு அமெரிக்கா வரை சாலைகள், ரயில்வே மற்றும் கடலுக்கடியில் கேபிள்களுடன் இணைக்கப்படும் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு QUAD உச்சிமாநாட்டை இந்தியா நடத்த இருக்கும் நிலையில், இந்திய -பசிபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமான வளர்ச்சியைப் பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயகம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதி, கடல்வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் சுமார் 60 மணிநேரம் மும்பையில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். பிடிபட்ட அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதிக்கு 2012 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவனான தஹாவூர் ராணா, வேறொரு வழக்கில் தண்டனை பெற்று அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ராணாவை நாடு கடத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து, ராணா சார்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ராணாவின் கோரிக்கை மனுக்களை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன.
இந்நிலையியல், ராணாவை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த, அமெரிக்க அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். தீவிரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல் பட்டு வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ராணாவுக்கு இந்தியாவில் தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.