டெல்லியில், 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், தனது புதிய பிரமாண்டமான அலுவலகத்தை ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் திறந்துள்ளது. சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான நன்கொடைகள் மூலம் கட்டப்பட்டுள்ள, இந்த புதிய ஆர்எஸ் எஸ் அலுவலகத்தில் 12 மாடிகள், 300 அறைகள் ஆடிட்டோரியங்கள், ஒரு நூலகம், மருத்துவமனை மற்றும் ஒரு அனுமன் கோயில் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் மகாராஸ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ளது. நாக்பூர் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு அடுத்தபடியாக ஆர்.எஸ்.எஸ் தனது அலுவலகங்களை நிறுவிய மூன்றாவது இடம் டெல்லியாகும்.
டெல்லியில் உள்ள அலுவலகம் முதன்முதலாக 1939ம் ஆண்டு திறக்கப்பட்டது, 1962ம் ஆண்டில், ஒரு மாடி அலுவலகம் அதே இடத்தில் அமைக்கப்பட்டது. 1980-களில் மற்றொரு மாடி கட்டப்பட்டது. தலைநகர் டெல்லியில் புதிய அலுவலகத்தை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு கேசவ் குஞ்ச் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கேசவ் குஞ்ச் திட்டம் இப்போது நிறைவடைந்துள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளாக ஜண்டேவாலாவில் உள்ள உதாசீன் ஆசிரமத்தில் ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சங்க நிர்வாகிகள் படிப்படியாக புதிய அலுவலகத்துக்கு மாறத் தொடங்கினர். இப்போது உதாசீன் ஆசிரம அலுவலகத்தை முழுவதும் காலி செய்துள்ளனர். புதிய ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் உள் வேலைகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
5 லட்சம் சதுரஅடியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் “சாதனா”, “பிரேரானா” மற்றும் “அர்ச்சனா” ஆகிய மூன்று டவர்கள் உள்ளன.
சாதனா டவர் தான் முதன்மை நிர்வாக மையமாக அமைந்துள்ளது. பிரேரானா மற்றும் அர்ச்சனா ஆகிய டவர்கள் குடியிருப்பு வளாகங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
பிரமாண்டமாக 12 மாடிகளுடன் கூடிய இந்த டவர்கள் மொத்தமாக 300 அறைகள், அலுவலக இடங்கள், மாநாட்டு அரங்குகள் மற்றும் பிரத்யேக கலையரங்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் 1,300 க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய மூன்று பெரிய கலை அரங்குகள் உள்ளன. இதில் ஒரு அரங்குக்கு முன்னாள் விஎச்பி தலைவர் அசோக் சிங்கால் பெயர் சூட்டப் பட்டுள்ளது
சாதனா டவரில் 10வது மாடியில், நிர்வாக அலுவலகம் மற்றும் 8,500 புத்தகங்கள் கொண்ட கேசவ் புஸ்தகலயா என்ற நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் போஜனாலாயா என்ற உணவகமும் உணவு பரிமாறும் இடமும் அமைக்கப்பட்டுள்ளன.
பிரெர்னா டவரில் பத்திரிகையாளர்களுக்கான அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திற்கு என்று பிரத்யேகமான தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அர்ச்சனா டவரில் நிர்வாகத்தில் உள்ள ஊழியர்கள் தங்குவதற்கு சுமார் 80 அறைகள் உள்ளன. இது தவிர 5 படுக்கை வசதி கொண்ட பெரிய மருத்துவமனை மருந்தகமும், இந்த புதிய ஆர்எஸ்எஸ்ஸின் கீழ் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் அனுப் டேவ் வடிவமைத்த இந்த அலுவலகம், பாரம்பரிய இந்திய கட்டடக்கலையை பிரதிபலிக்கிறது. தீன் தயாள் உபாத்யாய் மார்க்கில் உள்ள விஸ்வ இந்து பரிஷத்தின் தர்ம யாத்ரா மகா சங்க கட்டிடம் மற்றும் ரோஹினியில் உள்ள ஸ்ரீ ஜெகந்நாத் சேவா சங்க கட்டிடம் மற்றும் அசோக் விஹாரில் உள்ள சனாதன் பவன் போன்ற பிரமாண்டமான இந்து மத கட்டிடங்களை உருவாக்கியவர் அனுப் டேவ் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மற்றும் குஜராத் சிற்பங்கள் நிறைந்த இந்த புதிய ஆர்எஸ்எஸ் மாளிகையில், மர பயன்பாட்டைக் குறைக்க 1,000க்கும் மேற்பட்ட சிக்கலான வடிவமைக்கப்பட்ட கிரானைட் ஜன்னல் பிரேம்கள் அமைக்கப் பட்டுள்ளன. வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பயன்பாட்டுக்கு தேவைப்படும் மொத்த மின்சாரத்தில் 20 சதவீத மின்சாரத்தை சூரிய சக்தி பேனல்களால் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கழிவு மேலாண்மையை உறுதி செய்கிறது.
பிரேரானா மற்றும் அர்ச்சனா கோபுரங்களுக்கு இடையில் உள்ள பெரிய திறந்தவெளியில் அழகிய புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே, ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவரின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த திருவுருவச் சிலை முன்புதான் தினமும், ஷாகாக்கள் என்னும் காலை கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்த பிரமாண்ட வளாகத்தில், ஒரே நேரத்தில் 135 கார்களை பார்க்கிங் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது 270 கார்கள் பார்க்கிங் செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யவும் இடவசதி விடப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்த புதிய தலைமையகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மற்றும் சங்கத்துடன் தொடர்புடையவர்களின் நன்கொடைகளால் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 75,000 பேர் 5 ரூபாய் முதல் பல கோடிகள் வரை நன்கொடையாக அளித்துள்ளனர். மேலும், கேசவ் குஞ்ச் என்ற ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் பாதுகாப்புப் பணிகளில் , மத்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
நாக்பூரில் தலைமையிடமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் ‘அகில் பாரதிய பிரதிநிதி சபா’வே, உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பாக செயல்படுகிறது. இந்த ஆண்டுக்கான ‘அகில் பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் வரும் மார்ச் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை பெங்களூருவில் நடைபெறுகிறது.
அதற்கு முன்னதாக, வரும் பிப்ரவரி 19ம் தேதி, டெல்லியில் உள்ள புதிய தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் காரியகர்த்தா சந்திப்பை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.