தஞ்சாவூரில், உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் CBSE பள்ளி மீது உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உறுதியளித்துள்ளார்.
பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் தனியார் CBSE பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 19 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு CBSE பாடத் திட்டத்தில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு நாளை தேர்வு துவங்க உள்ள நிலையில், தற்போது வரை ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவர்களின் பெற்றோர் கேட்டபோது, CBSE-க்கான அங்கீகாரம் இதுவரை கிடைக்காததால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் தனி தேர்வர்களாக தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர், மாவட்ட ஆட்சியர் இல்லாததால், மாவட்ட DEO, CEO அதிகாரிகளுடன், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போதுதான் பள்ளிக்கு எட்டாம் வகுப்பிற்கே அங்கீகாரம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியாது என்பது உறுதியாகி உள்ளதால், பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதனிடையே, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் பள்ளி நிர்வாகம் தவறாக வழி நடத்தியதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக மாணவர்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நாளை சிபிஎஸ்இ தேர்வு எழுத முடியாது என்பதால், மாநில பாடத்தில் அடுத்த மாதம் எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இல்லையென்றால் அக்டோபர் மாதத்தில் தான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வு எழுத முடியும் எனவும் மாணவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன.
இதையடுத்து, வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் எழுதுவதாக பெற்றோர் தரப்பில் ஒத்துக் கொள்ளப்பட்டதால், அதற்கான நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.