அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு ஊக்கமளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக அமெரிக்காவிற்குச் சென்ற பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்துப் பேசினார். அப்போது, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் குடியேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இந்தியர்களை, திரும்ப அழைக்க பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான பிரதமர் மோடியின் சந்திப்பு ஊக்கமளிப்பதாகவும், நம் அனைவருக்கும் இருந்த சில பெரிய கவலைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பரஸ்பரமில்லாத சூழல் இருந்த நிலையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஒப்புக்கொண்டது ஒரு நேர்மறையான அறிகுறி என்றும், சட்டவிரோத குடியேற்றம் குறித்த பிரதமர் மோடியின் நிலைப்பாட்டுக்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.