திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சமூக பொறுப்புணர்வோடு குற்ற செயல்களை தடுத்து நிறுத்த குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாகவும், சமூக விரோதிகள் சுதந்திரமாக செயல்படுவதற்கு வழிவகுக்கும் சூழ்நிலையையும் ஏற்படுத்தி வருகிறது என எச். ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.
எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல் தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
மயிலாடுதுறையில் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக குரல் கொடுத்து சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் ஹரிசக்தி மற்றும் ஹரீஷ் இருவரையும் இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
மேலும் கள்ளச்சாராய வியாபாரத்தை தடுத்த நிறுத்த குரல் கொடுத்து சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட இவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடாக தலா ரூ.25/- லட்சமும் அவர்களுடைய குடும்பத்தினர் ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் அரசுப் பணியும் நிவாரணமாக வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்த படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி என தெரிவித்துள்ளார்.