கடந்த 10 ஆண்டுகளாக பத்ம விருதுகள் உரிய தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்களுக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது மனைவி லட்சுமி ரவியுடன் கலந்து கொண்டு பத்ம விருது பெற உள்ளவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து நினைவு பரிசினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் உள்துறையில் பணியாற்றியபோது பத்ம விருதுகளுக்கு பல பரிந்துரைகள் வரும் என தெரிவித்தார். ஆனால் தற்போது பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், வெளிப்படைத்தன்மையுடன், நடுவர் குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதாக கூறினார்.
இந்த பாராட்டு விழாவில் விருது அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் நல்லி குப்புசாமி, சமையல் கலை நிபுணர் தாமோதரன், சிற்பக்கலைஞர் ராதாகிருஷ்ண தேவ சேனாதிபதி, பேராசிரியர் எம்.டி.ஸ்ரீனிவாசன், கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்மந்தன், பறை இசை கலைஞர் வேலு ஆசான் ஆகியோர் கலந்து கொண்டனர்.