கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியுமா? என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார் .
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமரை தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பேசியிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதை விடுத்து ஜனநாயக விரோத தீய சக்தியான விகடனுக்கு முதலமைச்சர் வெண்சாமரம் வீசுவது ஏன்? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார் .
திமுகவில் இருந்த கருத்து மோதலுக்காக தினகரன் நாளிதழ் அலுவலகத்தை தீயிட்டு மூன்று பேரை உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் ஸ்டாலினுக்கு நினைவிருக்கிறதா எனவும். திமுக அரசை எதிர்க்கிற ஒரே காரணத்திற்காக நீதிமன்றம் கண்டித்தும் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கு பெயர் ஃபாஸிஸமா அல்லது பாயாசமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடசென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சரை விமர்சித்தார் என்பதற்காக திருநெல்வேலி சென்று கைது செய்ததற்கு பெயர் தான் ஜனநாயகமா, ஜனநாயக ரீதியாக அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும் பாஜகவினரை கைது செய்து மகிழ்ச்சி அடைவதற்கு பெயர் என்ன எனவும் வினா எழுப்பியுள்ள திருப்பதி நாராயணன், ஸ்டாலின் என்ற ரஷ்ய சர்வாதிகாரியின் பெயரை வைத்துக் கொண்டு ஜனநாயகம் குறித்து பேச உங்களுக்கே கூச்சமாக இல்லையா? என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் .