‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுத்து விட்டு பள்ளியின் நுழைவாயில் சாதி பெயரை எழுதலாமா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, தங்களுடைய சாதியை மேம்படுத்த வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சங்கம் தான் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற சாதி சங்கத்தை தமிழ்நாடு சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, சாதி சங்கங்கள் தான் கல்வி நிறுவனங்களையும் நடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிக்கூடத்துக்குள், சாதிகள் இல்லையடி பாப்பா என்று ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கும் அதே வேளையில், பள்ளியின் நுழைவு வாயிலில் சாதி பெயர் எழுதப்பட்டுள்ளதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலை என்ன? என்பதை வருகிற 19-ந் தேதி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.