மணலி அருகே மாநகராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை மணலி சின்ன சேக்காடு அருகே உள்ள பல்ஜி பாளையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
5 மண்டலங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் உணவு கழிவுகள் மூலம் பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
பயோ கேஸை கட்டுப்படுத்தக்கூடிய பேனல் போர்டு அறையில் பாஸ்கரன், சரவணகுமார் ஆகியோர் மெஷின் ஆபரேட்டர்களாக பணியாற்றி வந்த நிலையில், திடீரென மிஷின் வெடித்து விபத்துக்குள்ளானது. மேலும், கேஸ் வெடித்ததில் அலுவலகத்தின் மேல் சுவர் இடிந்து விழுந்ததில் சரவணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் படுகாயமடைந்த பாஸ்கரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.