தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக காங்கேயம் உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்லும் வகையில் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் சமீப காலமாக நெடுஞ்சாலையோர உணவகங்களில் உள்ள ஹோட்டல் நிர்வாகிகளுக்கும், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இடையே மோதல் போக்கு அதிகரித்து வந்தது. செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் உணவகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள உணவகத்திலும் ஹோட்டல் உரிமையாளருக்கும், அரசு பேருந்து ஓட்டுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது குறித்த செய்தி தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் வெளியானது. இதன் எதிரொலியாக கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், ஸ்ரீ சாய் சரவணபவன் உணவகத்தில் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, அந்த உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்லும் வகையில் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டனர்.