அரசு ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையிலும் அசுர வேகத்தில் செயல்பட்டுள்ள அதிபர் ட்ரம்ப், 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார். அதிகாரத்தைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, பணிநீக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்க அரசு துறைகளில் மொத்தம் 2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அதில் பெரும்பாலானோர் செயல்திறனற்றவர்கள் என்றும், தமக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்றும் கூறிய ட்ரம்ப், அரசு துறைகளில் ஆட்குறைப்பு செய்யப் போவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போதே ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
அதிபராக வெற்றி பெற்றதும், அமெரிக்க அரசின் செயல் திறனை மேம்படுத்துவதற்கும்,அரசு செலவுகளைக் குறைப்பதற்கும் புதிதாக, (DOGE ) என்னும் அரசு செயல்திறன் மேம்பாட்டு துறையை உருவாக்கினார். இந்த துறையின் தலைவராக , உலகின் மிகப்பெரிய பணக்காரரான டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார்.
அரசு மேற்கொள்ளும் செலவுகளைக் குறைத்தாலே,அரசின் செயல் திறன் அதிகரிக்கும் என்று நோக்கத்தில் இந்தத் துறை செயல்பட்டு வருகிறது. அதன் படி, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிக அளவில் குறைக்க, பணி நீக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
அமெரிக்காவில் குறிப்பாக, உள்துறை,எரிசக்தி, விவசாயம், சுகாதாரம், மனித சேவைகள் ஆகிய துறைகளில் தான் பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எரிசக்தி துறையில் 2000 பேர் வரை பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். அமெரிக்க உள் துறையில் தான் அதிக அளவில் பணிநீக்கங்கள் நடந்துள்ளன. சுமார் 2300 பேர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தில் 325 பேர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
இந்த துறை தான், அமெரிக்காவின் தேசிய பூங்காக்கள் மற்றும் நாட்டின் பொது நிலங்களில் சுமார் 500 மில்லியன் ஏக்கர்களை நிர்வாகம் செய்கிறது.
மேலும் நாட்டின் கடற்கரைகள் மற்றும் கடலில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு குத்தகை திட்டங்களையும் உள்துறையே நிர்வகித்து வருகிறது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், தங்கள் கோப்புக்களை ஒப்படைத்து விட்டு, அலுவ
லகங்களைக் காலி செய்ய வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
ஏற்கெனவே, பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் மூலமாகவோ அல்லது குழு வீடியோ அழைப்புகள் மூலமாகவோ ஆயிரக்கணக்கான சக ஊழியர்களுக்குப் பணி நீக்க செய்தி தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஊழியர்களுக்கு எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை, உரிய நடைமுறையும் இல்லை, தங்களைத் தற்காத்துக் கொள்ள எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று அமெரிக்க அரசு ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் எவரெட் கெல்லி கூறியிருக்கிறார்.
அமெரிக்க வனத்துறை சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,400 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. அதே நேரத்தில் தேசிய பூங்கா சேவை சுமார் 1,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. வரி வசூலிக்கும் வருவாய் துறை வரும் வாரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னதாக, செயல்திறன் அற்ற துறைகளாக அறியப்பட்ட துறைகளில், தாமாக முன் வந்து ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதனையடுத்து,சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்ய முன்வந்தனர். இது மொத்த அரசு பணிகளில் 3 சதவீதமாகும்.
அமெரிக்காவின் 36 ட்ரில்லியன் டாலர் கடன் மற்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட 1.8 ட்ரில்லியன் பண பற்றாக்குறையைச் சமாளிக்க இந்த நடவடிக்கை தேவையானது என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.