பிரதமர் மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்ட F-35 போர் விமானங்களை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிடமிருந்து F-35 போர் விமானங்களை இந்தியா வாங்கினால், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குறைந்த அளவில் F-35 போர் விமானங்களை வாங்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு
இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு முக்கியமான அங்கமாக இந்திய விமானப் படை விளங்குகிறது. இந்தியாவின் வான் எல்லையை பாதுகாப்பதே இந்திய விமானப்படையின் தலையாய கடமையாகும்.
எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதும் , வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துவதும் இந்திய விமானப்படையின் குறிக்கோளாகும்.
இந்திய விமானப் படை, 1932ம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி, ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டதாகும். இந்திய விமானப்படையில் சுமார் 170,000 வீரர்கள் உள்ளனர். சுமார் 1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் இந்திய விமானப் படையில் உள்ளன. இந்திய விமானப்படை உலகில் நான்காவது பெரிய விமானப் படையாகத் திகழ்கிறது.
1933ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், நான்கு வெஸ்ட்லாண்ட் வாபிடி விமானங்கள் (Westland Wapidi) மற்றும் ஐந்து விமானிகளுடன் இந்திய விமானப்படை தனது முதல் படையணிப் பிரிவை (squadron) தொடங்கியது. ஒரு விமானப் படை பிரிவில் சுமார் 18 போர் விமானங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைக்கு, அனுமதிக்கப்பட்ட 43 விமானப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கைக்கு, 31 விமானப் படைப்பிரிவுகள் மட்டுமே சேவையில் உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக மிக்-21 விமானங்களின் இரண்டு படைப்பிரிவுகள் மிகக் குறைவாகவே இயக்கப்படுகின்றன. எனவே, தற்போது பயன்பாட்டில் 29 விமானப் படைப்பிரிவுகளே உள்ளன.
ஒரு வலிமையான நாட்டுக்கு முப்படைகள் மட்டும் வலிமையாக இருந்தால் மட்டும் போதாது, ஆளுமைமிக்க சிறந்த தலைமையும், பிற நாடுகளிடம் கொண்ட தெளிவான உறவும் மிக அவசியம்.
கடந்த 10 ஆண்டுகளாக, வெளியுறவு கொள்கையில் இந்தியா மிகுந்த சாதுரியமாகவே செயல்பட்டு வருகிறது. முப்படையின் திறனை மேம்படுத்தி வரும் இந்தியா, சமீப ஆண்டுகளாக, தனது இராஜதந்திர வியூகங்களை சாமார்த்தியமாக மாற்றியமைத்துள்ளது.
தனது இறையாண்மையை பாதுகாக்க எவரின் தேவையையும் நாடாமல் தேவையானவற்றை தானே துணிந்து உள்நாட்டிலேயே உருவாக்கத் தொடங்கியுள்ளது. பால்கோட் தாக்குதல், காஷ்மீரில் 370 சட்டப் பிரிவை நீக்கியது, அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தாலும் ரஷ்யாவிடமிருந்து S-400 விமானங்களை வாங்கியது என இந்தியா அசுர வேகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
2014 ஆம் ஆண்டுக்கு முன்னதாக, புதிய போர் விமானங்களை கொள்முதல் செய்ய தவறியதால், இந்தியாவின் விமான படைப்பிரிவின் எண்ணிக்கை சரிவைக் கண்டது. எனவே, பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2016 ஆம் ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது.
பிற நாடுகள் பயன்படுத்தும் ரஃபேல் போர் விமானத்தில் இல்லாத அதிநவீன அம்சங்கள் இந்திய ரபேல் விமானத்தில் உள்ளன. ரேடார் விரிவாக்கம், helmet-mounted display, அதிக உயரமுள்ள விமானநிலையங்களிலும் செயல்படும் திறன், advanced infrared search and track sensor, சக்திவாய்ந்த மின்னணு ஜாம்மர். நீண்ட தூர, வானில் பறந்த படியே, வானில் உள்ள இலக்கை தாக்கும் நவீன meteor ஏவுகணை அம்சமும், இந்திய ரஃபேல் போர் விமானத்தில் இணைக்கப் பட்டுள்ளன.
இந்த சூழலில்தான், F-35 போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்கும் என்று அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். என்றாலும், F-35 போர் விமானங்களை, ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்புடன் ஒருங்கிணைப்பதை அமெரிக்கா எதிர்க்கிறது.
அமெரிக்காவிடமிருந்து F-35 போர் விமானங்களை வாங்குவதற்கான செயல்முறை எதுவும் இன்னும் தொடங்கவில்லை என்று கூறியுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அதற்கான பேச்சுவார்த்தைகள் “முன்மொழிவு நிலையில்” உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், Airborne Warning and Control Systems (AWACS) என்னும் வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய போர் விமானத்துக்கு மாற்றாக F-35 ஒப்பந்தம் இருக்காது என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Advanced Multirole Combat Aircraft programme என்னும் திட்டத்தின் கீழ், உள்நாட்டு ஜெட் விமானங்களை உருவாக்கும் வரை, ஒரு தற்காலிக தீர்வாக F-35 போர்விமானங்களை குறைந்த எண்ணிக்கையில் வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே ரஷ்யா தனது ஐந்தாம் தலைமுறை ஜெட்போர் விமானமான SU- 57 போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க தயாராக இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.