சிவகங்கையில் இளைஞரை சாதி பெயரால் இழிவுபடுத்தி கைகளை வெட்டிய சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.
மானாமதுரை அருகேயுள்ள மேலபிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயாசாமி என்ற இளைஞரை, அதே பகுதியைச் சேர்ந்த வினோத் குமார், ஆதீஸ்வரன், வல்லரசு ஆகியோர் சாதிப் பெயரால் இழிவுபடுத்தி கைகளை வெட்டினர்.
இதில் படுகாயமடைந்த அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை ஏற்கனவே சிப்காட் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக, இன்று தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், எஸ்.பி ஆஷிஸ் ராவத் உள்ளிட்டோருடன் பாதிக்கப்பட்ட இளைஞரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் இளைஞரின் குடும்பத்தாருக்கு இழப்பீட்டு தொகையாக 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் மற்றும் நீதிபதி அமைப்பது குறித்து ஆட்சியர் ஆஷா அஜித்துடன் ஆலோசனை நடத்திய அவர்கள், அக்கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா மற்றும் பாதுகாப்பு வழங்கவும் அவருக்கு பரிந்துரைத்தனர்.