காரைக்கால் மீனவர்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதைக் கண்டித்து எட்டாவது நாளாக காரைக்கால் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேளாங்கண்ணி பயணிகள் ரயிலை பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும், மீனவர்கள் கலைந்து செல்லாததால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பு பாதையில் தலைவைத்த பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக ரயில் 30 நிமிடம் தாமதாக புறப்பட்டுச் சென்றது.