புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமாரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையரான ராஜிவ் குமார் இன்றுடன் பணி நிறைவு பெறுகிறார். இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெற உள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களை கருத்தில் கொண்டு, அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இதில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அர்ஜூன் ராம் மேக்வால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கான அறிவிப்பை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டது. காலியாக உள்ள மற்றொரு தேர்தல் ஆணையர் பதவிக்கு விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தேர்தல் ஆணையராக நாளை பதவியேற்கும் ஞானேஷ்குமார் 2029 ஜனவரி 26ஆம் தேதி வரை பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.