மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் 1991ஆம் ஆண்டு மத வழிபாட்டு தலங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடு சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டுக்கு முந்தைய வழிபாட்டு தலங்கள் மீது யாரும் உரிமை கோர முடியாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதே நேரத்தில், மத வழிபாட்டு தலங்கள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன.
இந்த மனுக்கள் அனைத்து ஒரே வழக்காக 2020ஆம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், மத வழிபாட்டு தலங்கள் சட்டத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கு நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பாக இனிமேலும் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டாம் என்றும், புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருவதாகவும், இன்றைய தினம் இரு நீதிபதிகள் மட்டும் உள்ளதால், வழக்கு விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பதாகவும் கூறினர்.